நடப்பு சாம்பியனை துவம்சம் செய்து ஆறுதல் * கிளாசன் கிளாசிக் சதம்
டெல்லி: நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆறுதல் + திருப்தியுடன் ஐபிஎல் 18வது சீசனை நிறைவு செய்தது.

அருண் ஜெட்லி அரங்கில் நடந்த இப்போட்டியில், பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட இரு அணிகள் மோதியதால் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை என்றாலும், வெற்றியுடன் விடை பெறப்போவது யார் என்பதில் டக் ஆஃப் வார் இருக்கவே செய்தது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால்… அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் இருவரும் எதிர்கொண்ட பந்தை எல்லாம் வெறிகொண்டு தாக்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரில் 92 ரன் சேர்த்து எதிர்தரப்பை மிரள வைத்தது.
அபிஷேக் 32 ரன் (16 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சுனில் நரைன் சுழலில் ரிங்கு சிங் வசம் பிடிபட்டார். அப்பாடா என கேகேஆர் பவுலர்கள் விட்ட பெருமூச்சு சில நிமிடங்களுக்கு கூட நீடிக்கவில்லை. அடுத்து ஹெட் – கிளாசன் இணைந்து ருத்ரதாண்டவமாட, சன்ரைசர்ஸ் 12.3 ஓவரில் 175 ரன்னை எட்டி மிரட்டியது.
ஹெட் 76 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி நரைன் பந்துவீச்சில் ரஸ்ஸலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதற்குப் பிறகும் கொல்கத்தாவின் தலைவலி தீர்ந்தபாடில்லை. கிளாசன் – கிஷன் இணைந்து 35 பந்தில் 83 ரன் சேர்த்து தெறிக்கவிட்டனர். இஷான் 29 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அரோரா பந்துவீச்சில் பலியானார்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் பந்தை பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட கிளாசன் 17 பந்தில் அரை சதம்… 37 பந்தில் சதம் என அதகளம் செய்தார். சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்தது.

கிளாசன் 105 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), அனிகேத் வர்மா 12 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 2, வைபவ் அரோரா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 279 ரன் எடுத்தால் வென்ற அல்மோஸ்ட் அசாத்தியமான இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, 18.4 ஓவரில் 168 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
மணிஷ் பாண்டே 37 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்ஷித் ராணா 34 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), சுனில் நரைன் 31 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, கேப்டன் ரகானே (15) உள்பட மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.
சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட் கைப்பற்றினர். 110 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி சன்ரைசர்ஸ் ஆறுதல் அடைந்தது. கிளாசிக் சதம் விளாசிய கிளாசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- கிளாசன் 37 பந்தில் சதம் விளாசியது, ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட 4வது அதிவேக சதமாக அமைந்தது. இந்த வரிசையில் கிறிஸ் கேல் (30 பந்து), வைபவ் சூர்யவன்ஷி (35 பந்து), யூசுப் பதான் (37 பந்து), கிளாசன் (37 பந்து), டேவிட் மில்லர் (38 பந்து) டாப் 5ல் உள்ளனர்.