சென்னை சூப்பர் கிங்சுக்கும் கிடைத்தது ஆறுதல்!

நம்பர் 1ல் ஊசலாடும் டைட்டன்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் 18வது சீசன் 67வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது.

consolation win for csk

மோடி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன் குவித்தது.

5வது வீரராகக் களமிறங்கிய டிவால்ட் பிரெவிஸ் அதிகபட்சமாக 57 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் அவுட்டானார். டெவன் கான்வே 52 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), உர்வில் படேல் 37 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஆயுஷ் மாத்ரே 34 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவம் துபே 17 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஜடேஜா 21 ரன்னுடன் (18 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குஜராத் பந்துவீச்சில் பிரசித் 2, சாய் கிஷோர், ரஷித் கான், ஷாருக் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 231 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய குஜராத் அணி, சிஎஸ்கே பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு 83 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சாய் சுதர்சன் அதிகபட்சமாக 41 ரன் (28 பந்து, 6 பவுண்டரி) விளாச, அர்ஷத் கான் 20, ஷாருக் கான் 19, திவாதியா 14, கேப்டன் கில் 13, ரஷித் கான் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளிக்க, சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை பந்துவீச்சில் அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஜடேஜா 2, கலீல் அகமது, பதிரணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Dewald Brevis

சிஎஸ்கே 14 லீக் ஆட்டங்களில் 4 வெற்றி, 10 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 10வது இடம் பிடித்தது. குஜராத் டைட்டன்ஸ் 14 போட்டியில் 18 புள்ளிகளுடன் (9 வெற்றி, 5 தோல்வி) தொடர்ந்து முதலிடம் வகித்தாலும், அது நிலைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் காத்திருக்கிறது.

நடப்பு சீசனில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்த குஜராத், பஞ்சாப், ஆர்சிபி, மும்பை அணிகள் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் தட்டுத்தடுமாறும் நிலையில், ஏற்கனவே வெளியேறிய அணிகள் ஆறுதல் வெற்றிகளுடன் விடை பெற்றது அந்த அணிகள் அடுத்த சீசனை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க நிச்சயம் உதவும் என நம்பலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top