ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா – ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸில் ஜம்மு & காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷுபம் பண்டிர் 121, சஹில் லாட்ரா 72, கேப்டன் பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாதவன் 70, அப்துல் சமத் 61 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த கர்நாடகா அணி 93.3 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 160 ரன்கள் சேர்த்தார்.
ஜம்மு & காஷ்மீர் அணி சார்பில் அகிப் நபி 5 விக்கெட்களை வீழ்த்தினார். சுனில் குமார், யுத்விர் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 291 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 57 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
கம்ரான் இக்பால் 94 , சஹில் லோட்ரா 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 477 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டத்தை ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் தொடர்ந்தனர்.
இக்பால் , சாஹில் லோட்ரா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். 4 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இக்பால் 160 ரன்களுடனும், லோட்ரா 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து கர்நாடகா அணிக்கு 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால் இந்த இலக்கை அடைவதற்கு கர்நாடக அணியால் எட்டுவது சாத்தியம் இல்லை என்ற நிலை நிலவியது. எனவே, போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது.
ஷுபம் பண்டிர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் 55 விக்கெட்களை வேட்டையாடிய அகிப் நபி தொடர்நாயகனாக தேர்வானார்.
