100 ரன் வித்தியாசத்தில் ராயல்சை துவம்சம் செய்தது மும்பை

* முதலிடத்துக்கு முன்னேற்றம்

ஜெய்பூர்: ஐபிஎல் 18வது சீசன் 50வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன் வித்தியாசத்தில் துவம்சம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

Rickelton

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ரிக்கெல்டன், ரோகித் இணைந்து மும்பை இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

ரிக்கெல்டன் 61 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் ஷர்மா 53 ரன் (36 பந்து, 9 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். அடுத்து சூரியகுமார் யாதவ் – கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து அதிரடியைத் தொடர… மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது.

சூரியகுமார் 48 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் 48 ரன்னுடன் (23 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் தீக்‌ஷனா, பராக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இணைந்து துரத்தலை தொடங்கினர். சூர்யவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சாஹர் வேகத்தில் ஜாக்ஸ் வசம் பிடிபட, ஆர்ஆர் அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

முதல் கோணல் முற்றிலும் கோணலாக… அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறிய ராயல்ஸ் 16.1 ஓவரில் 117 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஜோப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 30 ரன் எடுக்க, கேப்டன் பராக் 16, ஷுபம் துபே 15, ஜெய்ஸ்வால் 13, ஜுரெல் 11 ரன் எடுத்து அவுட்டாகினர்.

MI celebration 2

மும்பை பந்துவீச்சில் போல்ட், கர்ண் ஷர்மா தலா 3 விக்கெட், பும்ரா 2, தீபக் சாஹர், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 100 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை அடியோடு இழந்தது.  

எம்ஐ தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top