சன்ரைசர்சை அடக்கியது குஜராத் டைட்டன்ஸ்

அபிஷேக் போராட்டம் வீண்

அகமதாபாத்: ஐபிஎல்  18வது சீசன் 51வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன் வித்தியாசத்தில் வென்றது.

Sai Gill

மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற எஸ்ஆர்எச் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். குஜராத் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய சாய் சுதர்சன் – கேப்டன் கில் இணை முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரில் 87 ரன் சேர்த்தது.

ஆரஞ்சு தொப்பியை மீண்டும் வசப்படுத்திய சுதர்சன் 48 ரன் (23 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஜீஷன் அன்சாரி பந்துவீச்சில் கிளாசன் வசம் பிடிபட்டார். அடுத்து கில் – பட்லர் இணைந்து ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்க்க, குஜராத் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

கில் 76 ரன் (38 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். பட்லர் 64 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 21 ரன், ராகுல் திவாதியா 6 ரன், ரஷித் கான் (0) விக்கெட்டை பறிகொடுக்க… குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.

ஷாருக் கான் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 3, கம்மின்ஸ், அன்சாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து துரத்தலை தொடங்கினர். ஹெட் 20, இஷான் கிஷன் 13 ரன்னில் வெளியேற, அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த அபிஷேக் 74 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி இஷாந்த் பந்துவீச்சில் சிராஜ் வசம் பிடிபட்டார். கிளாசன் 23, அனிகேத் 3, கமிந்து மெண்டிஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

எஸ்ஆர்எச் தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி, கேப்டன் கம்மின்ஸ் அதிரடி காட்டி ஆறுதல் அளித்தனர். சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் மட்டுமே சேர்த்து 38 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நிதிஷ் குமார் 21 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), கம்மின்ஸ் 19 ரன்னுடன் (10 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Prasidh Krishna 3

குஜராத் பந்துவீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட், இஷாந்த், கோட்ஸீ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 4 ஓவரில் 19 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய பிரசித் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கடைசி ஓவரின் 2வது பந்தை வீசிய இஷாந்த் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக சாய் கிஷோர் மீதி 4 பந்துகளை வீசி ஓவரை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டியில் 7வது வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் 9வது இடத்தில் நீடிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top