கேகேஆர் டோட்டல் சரண்டர்!

அஷ்வனி, ரிக்கெல்டன் மிரட்டல்

மும்பை: நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச… அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறிய கொல்கத்தா அணி 16.2 ஓவரிலேயே 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

Ashwani Kumar

ரகுவன்ஷி 26, ரமன்தீப் சிங் 22, மணிஷ் பாண்டே 19, ரிங்கு சிங் 17, கேப்டன் ரகானே 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். குறிப்பாக, தொடக்க வீரர்கள் சுனில் நரைன் (0), டி காக் (1) சொதப்பியது முதல் கோணல் முற்றிலும் கோணலாக முடிந்தது.

மும்பை பந்துவீச்சில் அஷ்வனி குமார் 3 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தீபக் சாஹர் 2, ஹர்திக், போல்ட், விக்னேஷ், சாண்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரோகித் ஷர்மா 13, வில் ஜாக்ஸ் 16 ரன் எடுத்து ரஸ்ஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

Ryan Rickelton

அதிரடியாக விளையாடி கேகேஆர் பந்துவீச்சை துவம்சம் செய்த ரிக்கெல்டன் 62 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), சூரியகுமார் 27 ரன்னுடன் (9 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அஷ்வனி குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முதல் வெற்றியை ருசித்த மும்பை 6வது இடத்துக்கு முன்னேற, நடப்பு சாம்பியன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. லக்னோவில் நடைபெறும் (ஏப்.1) 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top