கேகேஆர்-ல் உம்ரான் அவுட் நெட் பவுலருக்கு ஜாக்பாட்

ஐபிஎல் 18வது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் (25 வயது), காயம் காரணமாக விலகியுள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2021ல் களமிறங்கியபோது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய உம்ரான், டெங்கு காய்ச்சல், காயங்கள் காரணமாக பந்துவீச்சை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முழு உடல்தகுதி இல்லாததால் உம்ரான் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chetan Sakariya

அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சகாரியா (27 வயது) நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருமே காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து, தற்போது தான் களமிறங்கத் தயாராகி உள்ளார். ரஞ்சியில் சவுராஷ்டிரா அணிக்காக (2024, பிப்ரவரி) விளையாடியதற்கு பிறகு முதுகு வலியால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். 2 லட்சம் ரூபாய்க்கு வலைப்பயிற்சி பவுலராக இடம்பெற்றிருந்த சகாரியா, மெயின் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால் ரூ.75 லட்சம் வழங்கப்பட உள்ளது.

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பெரிதாக நம்பியிருக்கும் வேகப் பந்துவீச்சாளர்கள் காயங்களால் அவதிப்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மார்ச் 22, ஈடன் கார்டனில் நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் சவாலை சந்திக்கும் கேகேஆர், அதற்கு முன்பாக எல்லா வீரர்களும் முழுவீச்சில் தயாராகி விடுவார்கள் என நம்புகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top