மார்ஷ், மார்க்ரம் அரை சதங்கள் வீண்
லக்னோ: ஐபிஎல் 18வது சீசன் 61வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி பிளே ஆப் சுற்று வாய்ப்பை அடியோடு இழந்தது.

வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்துவீச… லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 65 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), மார்க்ரம் 61 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். நிகோலஸ் பூரன் 45 ரன் (26 பந்து), 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ரன் அவுட்டானார்.
கேப்டன் ரிஷப் பண்ட் (7 ரன்), ஆயுஷ் பதோனி, அப்துல் சமத் தலா 3 ரன், ஷர்துல் தாகூர் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ரவி பிஷ்னோய் 0, ஆகாஷ் தீப் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். எஸ்ஆர்எச் பந்துவீச்சில் மலிங்கா 2, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், நிதிஷ் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் ஷர்மா 18 பந்தில் அரை சதம் விளாசி உத்வேகம் அளித்தார். அதர்வா 13, அபிஷேக் 59 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), இஷான் கிஷன் 35 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கிளாசன் 47 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் 32 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, காயத்தால் ஓய்வு) விளாசி பெவிலியன் திரும்பினர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. அனிகேத், நிதிஷ் குமார் தலா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் திக்வேஷ் ரதி 2, வில் ஓ’ரூர்கே, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். எஸ்ஆர்எச் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், லக்னோ அணியும் இந்த தோல்வியால் ஏமாற்றத்துடன் வெளியேறியது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் அந்த அணி வென்றாலும், மும்பை அல்லது டெல்லியை முந்தும் வாய்ப்பு அடியோடு இல்லை.
குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 4வது இடத்துக்காக வரிந்துகட்டுகின்றன.