16 ரன்னுக்கு 7 விக்கெட் காலி… ஆர்சிபி பரிதாபம்

இஷான் ஆட்ட நாயகன் * சன்ரைசர்ஸ் ஆறுதல்

லக்னோ: ஐபிஎல் 18வது சீசன் 65வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி 16 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து 42 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதுடன் 3வது இடத்துக்கு பின்தங்கியது.

SRH celebration 2

மழை அச்சுறுத்தல் காரணமாக பெங்களூருவில் இருந்து லக்னோவுக்கு மாற்றப்பட்டு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசியது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட சன்ரைசர்ஸ், அச்சமின்றி அடித்து விளையாடி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன் குவித்தது.

இஷான் கிஷன் அதிகபட்சமாக 94 ரன் (48 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அபிஷேக் ஷர்மா 34 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட் 17, கிளாசன் 24, அனிகேத் வர்மா 26 ரன், மனோகர் 12, கேப்டன் கம்மின்ஸ் 13* ரன் எடுத்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஷெப்பர்டு 2, புவி, லுங்கி, சுயாஷ், க்ருணால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் – கோஹ்லி ஜோடி 7 ஓவரில் 80 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. கோஹ்லி 43 ரன் (25 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), மயாங்க் 11, சால்ட் 62 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

Ishan Kishan 3

15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்த ஆர்சிபி அணி, 19.5 ஓவரில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 42 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரஜத் பத்திதார் 18, கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 24 ரன் எடுக்க, பின் வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

ஆர்சிபி அணி கடைசி 25 பந்தில் 16 ரன் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, மலிங்கா 2, உனத்கட், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, நிதிஷ் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஹைதராபாத் அணி ஆறுதல் வெற்றி பெற்ற நிலையில், ஆர்சிபி முதல் 2 இடங்களில் ஒன்றை பிடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டு 3வது இடத்துக்கு பின்தங்கியது.   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top