பஞ்சாப் கிங்ஸ் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

* சென்னைக்கு 8வது தோல்வி * சாம் அதிரடி வீண்

* சாஹல் ஹாட்ரிக் * ஷ்ரேயாஸ் அமர்க்களம்

சென்னை: ஐபிஎல் 18வது சீசன் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

Shreyas 1

சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச… சென்னை அணி 19.2 ஓவரில் 190 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சாம் கரன் அதிகபட்சமாக 88 ரன் (47 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார்.

டிவால்ட் பிரெவிஸ் 32, ஜடேஜா 17, ஷேக் ரஷீத், கேப்டன் தோனி தலா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சாஹல் வீசிய 19வது ஓவரில் தோனி, ஹூடா (2), காம்போஜ் (0),நூர் அகமது (0) என ஹாட்ரிக் உள்பட 4 பேர் அவுட்டானது சிஎஸ்கே அணி 200 ரன்னை தாண்டுவதை தடுத்து நிறுத்தியது.

பஞ்சாப் பந்துவீச்சில் சாஹல் 3 ஓவரில் 32 ரன்னுக்கு 4 விக்கெட், அர்ஷ்தீப், யான்சென் தலா 2, அஸ்மதுல்லா, ஹர்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Sam Curran

இதையடுத்து, 20 ஓவரில் 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிரியன்ஷ் ஆர்யா 23 ரன் (15 பந்து, 5 பவுண்டரி), பிரப்சிம்ரன் 54 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் 72 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஷஷாங்க் சிங் 23 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினர்.

இங்லிஸ் 6 ரன், யான்சென் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி கட்டத்தில் ஷ்ரேயாஸ், சூர்யன்ஷ் ஷெட்கே விக்கெட்டை எடுத்த சிஎஸ்கே கொஞ்சம் நப்பாசை பட்டாலும், கலீல் வீசிய 19.4வது பந்தை யான்சென் பவுண்டரியாக விளாசி சென்னை ரசிகர்களின் ஏற்கனவே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

சிஎஸ்கே பந்துவீச்சில் கலீல் அகமது, பதிரணா தலா 2, ஜடேஜா, நூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டியில் 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, 1 ரத்து) 2வது இடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி 10 போட்டியில் 8வது தோல்வியை சந்தித்து தொடர்ந்து கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.  

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top