மழையால் நடையை கட்டியது நடப்பு சாம்பியன் கேகேஆர்

பெங்களூரு: ஐபிஎல் 18வது சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளிடையே நடைபெற இருந்த 58வது லீக் ஆட்டம், கனமழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கேகேஆர் பரிதாபமாக பறிகொடுத்தது.

rain in blore

எல்லையில் நிலவிய போர் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், ஒருவார கால இடைவெளிக்குப் பின்னர் மே 17ல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்சிபி – கேகேஆர் அணிகள் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுவதற்குத் தயாராக இருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போட்டியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டிருந்த நிலையில், நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரும் மழை விடாததால், டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

rain 2

இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த முடிவால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டியில் 17 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறிய நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (13 போட்டியில் 12 புள்ளி) பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அடியோடு பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

மே 18 ஞாயிறன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜெய்பூரில் பிற்பகல் 3.30க்கு தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர். அதைத் தொடர்ந்து, டெல்லியில் இரவு 7.30க்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top