ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியது. மாலை 6 மணி அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்டமான வகையில் தொடக்க விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதியது. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் உடல் நலக்குறைவு காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கவில்லை. இதனால் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. பனிப்பொழிவு இல்லாததால் அமெரிக்க பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தனர். அதிரடி வீரரான அபிஷேக் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா மட்டையை சுழற்றினார்.
6-வது ஓவரை வீசிய ஷாட்லி வான் ஷால்க்விக் 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். அவரது பந்து வீச்சில் இஷான் கிஷன் 20 (பந்துகள் 16, சிக்ஸர்கள் 2, பவுண்டரி 1), திலக் வர்மா 25 (பந்துகள் 16, சிக்ஸர் 1, பவுண்டரி 3), ஷிவம் துபே 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 6, ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 12.4 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது களமிறங்கிய அக்சர் படேல் நிதானமாக விளையாட மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியில் வெளுத்து வாங்கினார்.
மட்டையை சுழற்றிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 161ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவுக்கு உறுதுணையாக விளையாடிய அக்சர் படேல் 11 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 6 பந்துகளில், 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அமெரிக்க அணி சார்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்மீத் சிங் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
162 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அமெரிக்க அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரைஸ் கவுஸ் 0, சைதேஜா முக்கமல்லா 2 ஆகியோர் முகமது சிராஜ் பந்திலும், மோனங்க் படேல் ரன் ஏதும் எடுக்காத நிலையில் அர்ஷ் தீப் பந்திலும் ஆட்டமிழந்தனர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய மிலிந்த் குமார் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.
அமெரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் தேவையாக இருந்தது. 16-வது ஓவரை வீசிய அக்சர் படேல் முதல் இரு பந்துகளில் சஞ்சய் கிருஷ்ண மூர்த்தி 37 ரன்கள் (பந்துகள் 31, சிக்ஸர்கள் 2, பவுண்டரி 1), ஹர்மீத் சிங் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் அமெரிக்க அணிக்கு நெருக்கடி அதிகமானது.
அர்ஷ்தீப் சிங்கின் அடுத்த ஓவரில் முகமது மோஷின் (8) அவுட் ஆனார். கடைசி 2 ஓவர்களில் அமெரிக்க அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவையாக இருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 19-வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் முகமது சிராஜ் 11 ரன்களை வழங்கி கடை பந்தில் ஷுபம் ரஞ்ஜனேவை 37 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார்.
20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 புள்ளிகளை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.


The mobile app is a game changer. It’s way more convenient than using a browser and everything loads instantly. You guys should grab the bdl444appapk right now.