ஓய்வு பெறுகிறாரா தோனி?

கொல்கத்தா

சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஐபிஎல் எதிர்காலம் குறித்து 6 முதல் 8 மாதங்களுக்கு பிறகு முடிவு செய்வேன் எனக்கூறியுள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. 180 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் ஷிவம் துபே 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், உர்வில் படேல் 11 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்களும் விளாசினர். தோனி 18 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சிஎஸ்கே அணி. போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:

மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். இதுதான் எனக்கு கிடைத்த அன்பும், பாசமும். எனக்கு 43 வயதாகிவிட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. நீண்டகாலமாக நான் விளையாடி வருகிறேன். எனது கடைசி ஆட்டம் எப்போது இருக்கும் என ரசிகர்களுக்கு தெரியாது. அதனாலேயே நான் விளையாடுவதை பார்க்க மைதானத்துக்கு வருகிறார்கள்.

நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்.

நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, என் உடல் இந்த அழுத்தத்தைத் தாங்குமா என்பதைப் பார்க்க இன்னும் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது முடிவெடுக்க எதுவும் இல்லை. ஆனால் நான் பார்த்த அன்பும் பாசமும் சிறந்தது” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top