Asuthosh Sharma scaled

அசுதோஷ் அதிரடியில் டெல்லி த்ரில் வெற்றி

விசாகப்பட்டணம்: ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அசுதோஷ் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் சேஸ் செய்ய முடிவு செய்தார். எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் இணைந்து எல்எஸ்ஜி இன்னிங்சை தொடங்கினர்.

மார்க்ரம் 15 ரன் எடுத்து விப்ராஜ் நிகம் பந்துவீச்சில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார். அடுத்து மார்ஷ் – நிகோலஸ் பூரன் ஜோடி அதிரடியில் இறங்க, லக்னோ ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் சீறியது. இருவரும் பவுண்டரி, சிக்சராகப் பறக்கவிட்டு டெல்லி பந்துவீச்சை சிதறடித்தனர்.

மார்ஷ் 21 பந்திலும், பூரன் 24 பந்திலும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 42 பந்தில் 87 ரன் சேர்த்தது. மார்ஷ் 72 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

Vipraj Nigam
விப்ராஜ் நிகம்

நிகோலஸ் பூரன் 75 ரன் (30 பந்து,6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஸ்டார்க் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். லக்னோ சூப்பர் ஜயண்ட் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்து. தகடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 27 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), திக்வேஷ் ரதி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி பந்துவீச்சில் ஸ்டார்க் 3, குல்தீப் 2, நிகம், முகேஷ் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் 1.4 ஓவரில் 7 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

ஓரளவு முனைப்பு காட்டிய கேப்டன் அக்சர் படேல் 22 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), டு பிளெஸ்ஸி 29 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி அணி 113 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியதால் லக்னோ கை ஓங்கியது.

ஆனால், 7வது விக்கெட்டுக்கு அசுதோஷ் ஷர்மா – விப்ராஜ் நிகம் இணைந்து கடுமையாகப் போராட ஆட்டத்தின் போக்கு அடியோடு திசை மாறியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் கையை பிசைந்தனர். ஓவருக்கு 10 ரன் என்ற வேகத்தில் ஸ்கோர் இறக்கை கட்டிப் பறக்க, வெற்றி வாய்ப்பு டெல்லி பக்கமாக சாயத் தொடங்கியது.

அசுதோஷ் – நிகம் ஜோடி 22 பந்தில் 55 ரன் சேர்த்து மிரட்டினாலும், நிகம் 39 ரன் (15 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தது டெல்லி அணிக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி 3 ஓவரில் கேப்பிடல்ஸ் வெற்றிக்கு 39 ரன் தேவைப்பட, ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை எட்டி ரசிகர்களை நகம் கடிக்க வைத்தது.

மிட்செல் ஸ்டார்க் 2 ரன்னில் வெளியேறி டெல்லிக்கு நெருக்கடியை அதிகரித்தார். எனினும், ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரில் அசுதோஷ் 6, 4, 6 என பந்தை பறக்கவிட, மீண்டும் ஆட்டம் கண்ணாமூச்சி காட்டியது. 19வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய குல்தீப் 3வது பந்தில் ரன் அவுட்டாக, டெல்லி 192/9 என நூலிழையில் தொங்கியது. அசுதோஷுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக ஓடிய குல்தீப், விக்கெட்டை தானம் செய்தார்.

ஆனாலும் அதற்கு கை மேல் பலன் இருக்கவே செய்தது. பிரின்ஸ் யாதவ் வீசிய அடுத்த 3 பந்தில் அசுதோஷ் 2, 6, 4 என விரட்ட, டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. ஷாபாஸ் அகமது வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை வீணடித்த மோகித், அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து அசுதோஷுக்கு வாய்ப்பளித்தார்.

அதை அப்படியே இரு கைகளாலும் ஏந்திக்கொண்ட அசுதோஷ் 3வது பந்தை சிக்சருக்குத் தூக்கி டெல்லிக்கு த்ரில் வெற்றியை வசப்படுத்தினார். டெல்லி அணி 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நம்ப முடியாத வகையில் வென்று லக்னோ அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

கடைசி வரை மன உறுதியுடன் போராடிய அசுதோஷ் 66 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), மோகித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அசுதோஷ் ஷர்மா ஆட்ட நாயகன் விருதை முத்தமிட… டெல்லி கேப்பிடல்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top