டி 20 உலகக் கோப்பைக்கு அபிஷேக் சர்மா ஸ்பெஷல் பயிற்சி

புதுடெல்லி

டி 20 கிரிக்கெட் போட்டியில் பவர் பிளேவில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அமைத்து கொடுத்த அதிரடி பாணியையே பின்பற்றி வருகிறேன் என தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் சர்வதேச டி 20 போட்டிகளில் அறிமுகமானார். தனது அதிரடி மட்டை வீச்சால் அவர், தற்போது ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 34 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2 சதங்கள், 7 அரை சதங்களுடன 1,199 ரன்களை குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 190.92 ஆக உள்ளது.

இந்நிலையில் அபிஷேக் சர்மா கூறியதாவது:

ரோஹித் சர்மா நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். பவர்பிளேயில் அவர் கொடுத்த தொடக்கங்களால் எப்போதும் அழுத்தம் இருக்கும். நான் அணியில் சேர்ந்தபோது, பயிற்சியாளரும் கேப்டனும் என்னிடமிருந்து அதையே விரும்பினார்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட நான் விரும்புவதால், அது எனது ஸ்டைலுக்கு பொருந்தும் என்று கருதினேன். இந்த விஷயத்தில் நான் ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறேன்.

முதல் ஆறு ஓவர்களில் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவதே எனது வேலை. அதற்காக நான் நிறைய பயிற்சி செய்து வருகிறேன். ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவதற்கு குறிப்பிட்ட வழியில் பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கிடைக்கும்போது, அடுத்த தொடர் அல்லது போட்டிகளில் நான் எதிர்கொள்ளும் பந்து வீச்சாளர்களை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு தகுந்தவாறு பயிற்சிகள் மேற்கொள்வேன்.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக பயிற்சி செய்து வருகிறேன். வலை பயிற்சியில் மற்ற அணிகளில் உள்ள பந்து வீச்சாளர்களை போன்று வீசக்கூடியவர்களை வீசச் சொல்வேன். மேலும் உலகக் கோப்பை தொடரில் எனக்கு எதிராக அதிகவேகத்தில் பந்துவீச மாட்டார்கள். கடந்த சில போட்டிகளில் நான் அதை உணர்ந்தேன். அதனால் இந்த விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு அபிஷேக் சர்மா கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top