ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, நமீபியாவுடன் மோதியது. இந்திய அணியில் உடல் நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா களமிறங்கவில்லை.
அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக இஷான் கிஷன் 24 பந்துகளில், 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 61 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் விளாசினர்.
சஞ்சு சாம்சன், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில், 12 ரன்களும், திலக் வர்மா 21 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், ஷிவம் துபே 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்களும் சேர்த்தனர்.
அக்சர் படேல் 0, ரிங்கு சிங் 0, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களில் நடையை கட்டினர். கடைசி 11 பந்துகளில் இந்திய அணி 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தது
நமீபியா அணி சார்பில் ஜெரார்டு எராஸ்மஸ் எராஸ்மஸ் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பென் ஷிகோங்கோ, ஜேஜே ஸ்மித், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லோரன் ஸ்டீன்காம்ப் 20, ஜான் ஃப்ரைலின்க் 22, கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸ் 18, ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் 13, ஜேன் கிரீன் 11 ரன்கள் சேர்த்தனர்.
ஜேஜே ஸ்மித் 0, மலான் க்ரூகர் 5, பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 4, பென் ஷிகோங்கோ 0 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3, அக்சர் படேல் 2, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது. இந்த இரு வெற்றிகளின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் தொடர்ச்சியான 10-வது வெற்றியாக இது அமைந்தது. ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

