இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான ரேஹான் அகமது 24, பென் டக்கெட் 7 ரன்களில் நடையை கட்டினர். சீனியர் பேட்ஸ்மேனான ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல் ஜோடி சீராக ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. தனது 5-வது அரைசதத்தை கடந்த ஜேக்கப் பெத்தேல் 72 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஜெப்ரே வான்டேர்சே பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். தனது 3-வது சதத்தை விளாசிய ஹாரி புரூக் 66 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 136 ரன்களும் பொறுமையாக விளையாடி தனது 20-வது சதத்தை கடந்த ஜோ ரூட் 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து 358 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமா பவன் ரத்னாயகே 115 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் விளாசினார். பதும் நிசங்கா 50, கமில் மிஷாரா 22, துனித் வெல்லாலகே 22 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேமி ஓவர்டன், லியாம் டாவ்சன், வில் ஜேக்ஸ் 2, ஆதில் ரஷித் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தேர்வானர். தொடர் நாயகன் விருதை ஜோ ரூட் வென்றார். அவர், இந்தத் தொடரில் 247 ரன்களையும், 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி சொந்த மண்ணில் 5 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்துள்ளது.

