DC celebration 2 scaled

வெற்றியுடன் விடைபெற்றது டெல்லி கேப்பிடல்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் டாப் 4

ஜெய்பூர்: ஐபிஎல் 18வது சீசன் 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்த 4 அணிகளும் தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய முடியாமல் கண்ணாமூச்சி ஆடி வருகின்றன.

DC celebration 2

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.

பிரப்சிம்ரன் 28 ரன், ஜோஷ் இங்லிஸ் 32 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் 53 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), வதேரா 16, ஷஷாங்க் 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் வெளுத்து வாங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 44 ரன் (16 பந்து,3 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 3, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2, முகேஷ் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன்  களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.

கே.எல்.ராகுல் 35 ரன் (21 பந்து, 6 பவுண்டரி,1 சிக்சர்), கேப்டன் டு பிளெஸ்ஸி 23, கருண் நாயர் 44 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), செதிக்குல்லா அடல் 22 ரன் (16 பந்து, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். சமீர் ரிஸ்வி – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி கடைசி 27 பந்தில் 53 ரன் சேர்த்து வெற்றிக்கு உதவியது.

Sameer Rizvi

ரிஸ்வி 58 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), ஸ்டப்ஸ் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரிஸ்வி ஆட்ட நாயகன் விருது பெற்றார். டெல்லி கேப்பிடல்ஸ் 5வது இடம் + ஆறுதல் வெற்றியுடன் சீசனை நிறைவு செய்த நிலையில், முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை தற்காலிகமாக கோட்டை விட்ட பஞ்சாப் கிங்ஸ் கடைசி லீக் ஆட்டத்துக்காக காத்திருக்கிறது.

பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்த குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் 13வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே வெளியேறிய அணிகளிடம் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் 2 இடங்களைப் பிடிப்பதற்கான முட்டல் மோதலில்  இழுபறி நீடிக்கிறது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top