Gill 3

மழையாடிய த்ரில் போட்டியில் வெற்றியை பறித்த டைட்டன்ஸ்

மும்பை: ஐபிஎல் 18வது சீசன் 56வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் டிஎல்எஸ் விதிப்படி கடைசி பந்தில் வெற்றியை தட்டிப் பறித்து முதலிடத்துக்கு முன்னேறியது.

Gill 3

வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச… மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 53 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.

சூரியகுமார் யாதவ் 35 ரன் (24 பந்து, 5 பவுண்டரி), கார்பின் போஷ் 27 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். தீபக் சாஹர் 8 ரன், கர்ண் ஷர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் சாய் கிஷோர் 2, சிராஜ், அர்ஷத், பிரசித், ரஷித், கோட்ஸீ தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடக்கத்திலேயே சாய் சுதர்சன் (5 ரன்) விக்கெட்டை இழந்தாலும், கேப்டன் கில் – பட்லர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். பட்லர் 30 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஷ்வனி குமார் பந்துவீச்சில் ரிக்கெல்டன் வசம் பிடிபட்டார்.

மழை மேகங்கள் திரண்டு மிரட்டிக்கொண்டிருக்க, கில் – ஷெர்பேன் ரூதர்போர்டு ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. குஜராத் 14 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்திருந்த நிலையில், மழை கொட்டியதால் ஆட்டம் தடைப்பட்டது. அந்த சமயத்தில் டிஎல்ஸ் விதிப்படி தேவைப்படும் ரன்னுக்கு அதிகமாகவே குஜராத் அணி எடுத்திருந்தது.

சற்று நேர தாமத த்துக்குப்பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், பும்ரா, போல்ட் துல்லியமாகப் பந்துவீசி ஆட்டத்தின் போக்கை திசை திருப்பினர்.  கில் 43 ரன் (46 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரூதர்போர்டு 28 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாருக் கான் 6, ரஷித் கான் 2 ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாக… மும்பை இந்தியன்ஸ் கை ஓங்கியது.   

18 ஓவர் முடிவில் குஜராத் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. திவாதியா, கோட்ஸீ தலா 5 ரன்னுடன் இருந்தனர். அத்துடன் போட்டி முடிவதாக இருந்தால் வெற்றிக் கனி மும்பை கையில் விழுந்திருக்கும். ஆனால், சிறிது நேரத்தில் மழை நின்று மீண்டும் வீரர்கள் களமிறங்கினர். டிஎல்எஸ் விதிப்படி குஜராத் 19 ஓவரில் 147 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

Rain stops play

6 பந்தில் 15 ரன் தேவை என்ற நிலையில், தீபக் சாஹர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை திவாதியா பவுண்டரிக்கு விரட்ட… 3வது பந்தை கோட்ஸீ சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன், நோபால் காரணமாக கூடுதலாக 1 ரன், ஃபிரீ ஹிட்… என எல்லாமே டைட்டன்ஸுக்கு சாதகமாக அமைந்தது. 2 பந்தில் 1 ரன் என்ற நிலையில் கோட்ஸீ தேவையில்லாமல் தூக்கியடித்து அவுட்டாக இரு தரப்புமே பதற்றத்தில் நகம் கடித்தது.

கடைசி பந்தை எதிர்கொண்ட அர்ஷத் மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஓட… மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா அருமையான ரன் அவுட் வாய்ப்பை கோட்டைவிட்டு குஜராத் அணிக்கு வெற்றியை தாரை வார்த்தார். அவர் சரியாக ஸ்டம்புகளை சாய்த்திருந்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும்.

குஜராத் 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் விதிப்படி) வெற்றிக் கனியை தட்டிப்பறித்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. திவாதியா 11 ரன், அர்ஷத் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, அஷ்வனி குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தீபக் சாஹர் 1 விக்கெட் எடுத்தார். பொறுப்புடன் விளையாடி 43 ரன் எடுத்த (+3 கேட்ச்) ஜிடி கேப்டன் கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top