வெங்கடேஷ் வெறியாட்டம், அரோரா அமர்க்களம்
கொல்கத்தா: ஐபிஎல் 18வது சீசன் 15வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 80 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஈடன் கார்டன் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற எஸ்ஆர்எச் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர்கள் டி காக் 1, சுனில் நரைன் 7 ரன்னில் வெளியேற, கொல்கத்தா அணி 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

எனினும், கேப்டன் அஜிங்க்யா ரகானே – அங்க்ரிஷ் ரகுவன்ஷி இணைந்து 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 81 ரன் சேர்த்தனர். ரகானே 38 ரன் (27 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), ரகுவன்ஷி 50 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, சன்ரைசர்ஸ் தரப்பு மீண்டும் உற்சாகம் அடைந்தது.
ஆனால், அவர்கள் இருவரையும் அவுட்டாக்காமலே இருந்திருக்கலாம் என்று ஃபீல் செய்ய வைத்துவிட்டது வெங்கடேஷ் அய்யர் – ரிங்கு சிங் ஜோடி. குறிப்பாக, வெங்கடேஷின் வெறியாட்டம் ஐதராபாத் பவுலர்களை மிரளச் செய்தது. அவர் 25 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 41 பந்தில் 91 ரன் சேர்த்து மிரட்டினர்.
வெங்கடேஷ் 60 ரன் (29 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி ஓவரின் 3வது பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் ரஸ்ஸல் ரன் அவுட்டாக (1) கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது. ரிங்கு 32 ரன்னுடன் (17 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஷமி, கம்மின்ஸ், அன்சாரி, ஹர்ஷல், கமிந்து மெண்டிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 201 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 2.1 ஓவரில் 9 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.
ஓரளவு தாக்குப்பிடித்த நிதிஷ் குமார் 19, கமிந்து மெண்டிஸ் 27, கிளாசன் 33, கம்மின்ஸ் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட் தானம் செய்தனர். எஸ்ஆர்எச் அணி 16.4 ஓவரிலேயே 120 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் அரோரா 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 29 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வருண் சக்ரவர்த்தி 3, ரஸ்ஸல் 2, ராணா, நரைன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 80 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவிய சன்ரைசர்ஸ், புள்ளிப் பட்டியலில் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2வது வெற்றியை பதிவு செய்த நைட் ரைடர்ஸ் 5வது இடத்துக்கு முன்னேறியது.
லக்னோவில் நடக்கும் 16வது லீக் ஆட்டத்தில் (ஏப்.4) சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.