Rajat Patidar

சிஎஸ்கே ஏமாற்றம்;ஆர்சிபிக்கு 2-வது வெற்றி

சென்னை: ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

ஆர்சிபி தொடக்க வீரர்கள் ஃபில் சால்ட் – விராட் கோஹ்லி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 45 ரன் சேர்த்தனர். சால்ட் 32 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நூர் அகமது பந்துவீச்சில் எம்.எஸ்.தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் வெளியேறினார்.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 27 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து அஷ்வின் சுழலில் ருதுராஜ் வசம் பிடிபட, கோஹ்லி 31 ரன்னில் (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். லயம் லிவிங்ஸ்டன் 10, ஜிதேஷ் ஷர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும், உறுதியுடன் விளையாடிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பத்திதார் 51 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விடை பெற்றார்.

tim david
டிம் டேவிட்

கடைசி கட்டத்தில் களமிறங்கிய டிம் டேவிட் சிஎஸ்கே பந்துவீச்சை தெறிக்கவிட… ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. டேவிட் 22 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), புவனேஷ்வர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் நூர் அகமது 3, பதிரணா 2, கலீல் அகமது, அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தட்டுத் தடுமாறியது.

ஒரு முனையில் ரச்சின் ரவிந்த்ரா நங்கூரம் பாய்ச்சி நிற்க… ராகுல் திரிபாதி 5, ருதுராஜ் கெயிக்வாட் 0, தீபக் ஹூடா 4, சாம் கரன் 8 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ரச்சின் 41 ரன் (31 பந்து, 5 பவுண்டரி), ஷிவம் துபே 19 ரன்னில் ஜகா  வாங்க, சிஎஸ்கே 12.5 ஓவரில் 80 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.

RCB Celebration
விக்கெட் வீழ்த்திய மகிச்சியில் ஜோஷ் ஹேசில்வுட், விராட் கோலி.

ஓவருக்கு 20 ரன்னுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் அஷ்வின் 11 ரன் எடுத்து அவுட்டாக, கடைசி நம்பிக்கையாக ஜடேஜா – தோனி ஜோடி களத்தில் நின்றாலும்,, 24 பந்தில் 96 ரன் தேவை என்ற அசாத்தியமான சவால், வெற்றிக் கனியை ஆர்சிபி கரங்களில் சமர்ப்பித்துவிட்டது.

ஜடேஜா 25 ரன் எடுத்து (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஹேசல்வுட் வேகத்தில் சால்ட் வசம் பிடிபட்டார். தோனியின் கடைசி ஓவர் வாணவேடிக்கை சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், அவரி முன் கூட்டியே களமிறக்கி முயற்சித்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பை தவிர்க்க முடியவில்லை.

சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்து, 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தோனி 30 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), நூர் அகமது (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஹேசல்வுட் 3, யஷ் தயாள், லிவிங்ஸ்டன் தலா 2, புவனேஷ்வர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அந்த அணியின் கேப்டன் ரஜத் பத்திதார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அகமதாபாத்தில் நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top