‘ சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையை தகர்த்தது பட்டிதார் படை’
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் 8வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபியை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது இல்லை. இது 17 ஆண்டுகளாக நீடிக்கும் வரலாற்று சோகம்.

இந்த முறை அதை மாற்ற வேண்டும் என்ற துடிப்போடு ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி களம் இறங்கியது.ஆர்சிபி அணியில் பில்சால்ட் வழக்கம் போல் அதிரடி காட்ட, விராட் கோலி நிதானமாக ஆடினார். 16 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன் எடுத்து அதிரடி காட்டிய பில்சால்ட், நுார் அகமது பந்தை சந்தித்த போது அதிவேக ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றினார் டோனி. அப்போது 5 ஓவரில் ஆர்சிபி 45 ரன் எடுத்து இருந்தது.

அதன்பின் வந்த தேவதத் படிக்கல்லும் 14 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன் எடுத்து அஸ்வின் சுழலில் வெளியேறினார். ஆனாலும் ஆர்சிபியின் ரன்வேகம் நிற்கவில்லை.
12.2 ஓவரில் ஆர்சிபி ஸ்கோர் 127ஆக இருந்த போது விராட் கோலி 30 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன் எடுத்து இருந்த போது நுார் அகமது பந்தில் அவுட் ஆனார்.
அதன்பிறகு ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் கட்டுப்பாட்டில் வந்தது போல் இருந்தது. ஆனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் விடவில்லை. ஒரு பக்கம் லிவிங்ஸ்டன் 10, ஜிதேஷ்சர்மா 12 , குருணால் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனாலும், கேப்டன் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன் விளாசினார். இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்தது ஆர்சிபி. டிம் டேவிட் 8 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 22 ரன் குவித்து அவுட் ஆகாமல் இருந்தது கடைசி நேரத்தில் ஆர்சிபிக்கு கை கொடுத்தது.
சென்னை சூப்பர்கிங்ஸ் தரப்பில் நுார் அகமது 3, பதிரனா 2, அஸ்வின், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 198 ரன் இலக்கு என்பது மிகவும் கடினமாக கருதப்பட்டது. ஆனால் ஆர்சிபி தானே என்ற அலட்சியத்துடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 0, ராகுல் திரிபாதி 5, தீபக் ஹூடா 4, சாம் கரன் 8 ரன்னில் அடுத்தடுத்து வெளியேற 8.5 ஓவரில் 52 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தத்தளித்தது.
ஆர்சிபி தரப்பில் ஹேசல்வுட், லிவிங்ஸ்டன் மிரட்டினர். அதன்பின் வந்த சிவம் துபே 19, அஸ்வின் 11 ரன்னில் அவுட் ஆக, சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி உறுதியானது.
ஆனால் டோனியும், ஜடேஜாவும் கடுமையாக போராடினார்கள். ஜடேஜா 19 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 146 ரன் மட்டுமே எடுத்தது. டோனி 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
ஆர்சிபி அணி 50 ரன் வித்தியாசத்தில் மிகபிரமாண்ட வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக இந்த 18 ஆண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது. அதும் 6,155 நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி இதுவாகும். கடைசியாக 2008ம் ஆர்சிபி, சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றிருந்தது. நடப்பு சீசனில் கொல்கத்தாவை தொடர்ந்து ஆர்சிபிக்கு சென்னையிலும் மகத்தான வெற்றி, அதிலும் முதல் வெற்றி கிடைத்தது. ஆர்சிபி தரப்பில் ஹேசல்வுட் ஆட்ட நாயகன் விருது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு கிடைத்தது.
