Ishan Kishan scaled

இஷான் முதல் சதத்தில் எஸ்ஆர்எச் அபார வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

ஐதராபாத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் இணைந்து எஸ்ஆர்எச் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி 3 ஓவரில் 45 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.

அபிஷேக் 24 ரன் (11 பந்து, 5 பவுண்டரி) விளாசி தீக்‌ஷனா பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். அடுத்து ஹெட் உடன் இணைந்து இஷான் கிஷனும் ருத்ரதாண்டவமாட ஐதராபாத் ஸ்கோர் அநியாயத்துக்கு எகிறியது. ஹெட் 21 பந்தில் அரைசதம் அடிக்க, இஷான் 25 பந்தில் 50 ரன்னை எட்டினார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தனர். ஹெட் 67 ரன் (31 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற ராஜஸ்தான் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால், அந்த நிம்மதி சில விநாடிகளுக்கு கூட நிலைக்கவில்லை.

இஷான் ஒரு பக்கம் சிக்சர் மழை பொழிய… நிதிஷ் குமார் ரெட்டி 30 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாசன் 34 ரன் (14 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விடைபெற்றனர். அதிரடியை தொடர்ந்த இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. அந்த அணி தனது முந்தைய சாதனையை (287/3) சமன் செய்யும் வாய்ப்பை 1 ரன்னில் நழுவிட்டது குறிப்பிடத்தக்கது. இஷான் 106 ரன் (47 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 76 ரன் வாரி வழங்கி ஏமாற்றமளித்தார். தேஷ்பாண்டே 3, தீக்‌ஷனா 2, சந்தீப் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலேயே ஜெய்ஸ்வால் (1), கேப்டன் பராக் (4), நிதிஷ் ராணா (11) விக்கெட்டை பறிகொடுத்து 4.1 ஓவரில் 50/3 என தடுமாறியது.

இந்த நிலையில்… சஞ்சு சாம்சன் – துருவ் ஜுரெல் ஜோடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து துவம்சம் செய்ய, ராயல்ஸ் தரப்பு சற்று உற்சாகம் அடைந்தது. இருவரும் அரை சதம் விளாசி நம்பிக்கை அளித்தனர். சாம்சன் 66 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஜுரெல் 70 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஆனாலும், ஷிம்ரோன் ஹெட்மயர் – ஷுபம் பத்ரிபிரசாத் துபே இணைந்து 6வது விக்கெட்டுக்கு வெறிகொண்டு வெளுத்து வாங்க… ஆர்ஆர் ஸ்கோர் 200ஐ கடந்து கடகடவென முன்னேறியது. இருவரும் 33 பந்தில் 80 ரன் விளாசி கவுரமான தோல்வியை  உறுதி செய்ய உதவினர். ஹெட்மயர் 42 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து அவுட்டானார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன் குவித்து 44 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ஷுபம் துபே 34 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), ஆர்ச்சர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல் தலா 2, முகமது ஷமி, ஆடம் ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

முத்தான முதல் சதம் விளாசிய இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஐதராபாத் 2 புள்ளிகள் பெற்றதுடன் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top