ஸ்ரேயஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் எழுச்சி பெறுமா பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிகளை குவிப்பதற்கான வழியை கண்டறிய முடியாமல் திணறுகிறது. இந்த சீசனில் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரும், பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும் அணியை வழிநடத்த உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

PB 1

பஞ்சாப் அணி கடைசியாக 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பிடித்திருந்தது. இம்முறை கேப்டன்ஷிப்பில் நிதானமாக செயல்படும் ஸ்ரேயஸ் ஐயர், பயிற்சி முறைகளில் ஆக்ரோஷம் காட்டக்கூடிய பாண்டிங் ஆகியோரது உதவியுடன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கு முயற்சி செய்யக் கூடும்.

பேட்டிங்கில் கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் நடுவரிசையில் தங்களது தாக்குதல் ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்தில் மாற்றும் திறன் கொண்டவர்கள். ஸ்ரேயஸ் ஐயர் 3-வது இடத்தில் களமிறங்குவது பலம் சேர்க்கக்கூடும்.

வேகப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் இறுதிக்கட்ட ஓவர்களில் பலம் சேர்க்கக்கூடியவர். அவருக்கு உறுதுணையாக ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன், இளம் வீரர்களான யாஷ் தாக்குர், வைஷாக் விஜயகுமார், குல்தீப் சென் ஆகியோர் செயல்படக்கூடும். சுழலில் யுவேந்திர சாஹல் பலம் சேர்க்கக்கூடும்.

கொல்கத்தா அணிக்கு கடந்த சீசனில் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் கோப்பையை வென்று கொடுத்திருந்தார். ஆனால் பஞ்சாப் அணியின் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டது. இதை கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் எவ்வாறு மாற்றியமைத்து வெற்றிப் பாதையில் பயணிக்கப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top