தொடர்ச்சியாக 5வது தோல்வி… நொந்து நூடுல்சான சிஎஸ்கே!

ஆல்ரவுண்டர் நரைன் ஆட்ட நாயகன்

சென்னை: நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரகானே சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். ருதுராஜ் கெயிக்வாட் காயம் காரணமாக விலகியதால், தல தோனி தலைமையில் சிஎஸ்கே களமிறங்கியது.

Sunil Narine

எப்படியாவது தோனி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிவிடுவார் என்ற அதீத நம்பிக்கையுடன் சிஎஸ்கே ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரச்சின் ரவிந்த்ரா, டெவன் கான்வே இணைந்து சென்னை இன்னிங்சை தொடங்கினர். கான்வே 12, ரச்சின் 4 ரன் எடுத்து வெளியேற, ஓரளவு தாக்குப்பிடித்த விஜய் ஷங்கர் 29 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ராகுல் திரிபாதி 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த வீரர்களில் ஷிவம் துபே மட்டும் நங்கூரம் பாய்ச்சி நிற்க… அஷ்வின் 1, ஜடேஜா 0, ஹூடா 0, கேப்டன் தோனி 1, நூர் அகமது 1 ரன்னில் அவுட்டாகி சென்னை ரசிகர்களை விரக்த்தியில் ஆழ்த்தினர். ஒருவழியாக சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்தது.

துபே 31 ரன் (29 பந்து, 3 பவுண்டரி), அன்ஷுல் காம்போஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 4 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2, மொயீன் அலி, வைபவ் அரோரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 104 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, டி காக் – சுனில் நரைன் ஜோடி அதிரடியாக விளையாடி 4 ஓவரில் 46 ரன் சேர்த்து அமர்க்களமான தொடக்கத்தை கொடுத்தது.

Sunil Narine 2

டி கான் 23 ரன் (16 பந்து, 3 சிக்சர்), சுனில் நரைன் 44 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அவுட்டாகினர். கொல்கத்தா அணி 10.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. கேப்டன் ரகானே 20 ரன், ரிங்கு சிங் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை பந்துவீச்சில் காம்போஜ், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆல்ரவுண்டராக அசத்திய சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தோனி தலைமையேற்ற பிறகும், சென்னை அணி தொடர்ச்சியாக 5வது தோல்வியைத் தழுவியதால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் + சோகத்துடன் அரங்கில் இருந்து வெளியேறினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top