Avesh Khan

2 ரன்னில் லக்னோ த்ரில் வெற்றி

ஆவேஷ் அமர்க்களம் * ஜெய்ஸ்வால் அதிரடி வீண்

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், ஆவேஷ் கானின் அபார பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Avesh Khan

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ஓய்வெடுக்க, ரியான் பராக் தலைமை பொறுப்பேற்றார். சாம்சனுக்கு பதிலாக 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக அறிமுகமானார்.

ஐபிஎல் தொடரில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற பெருமை சூர்யவன்ஷிக்கு சொந்தமானது. மிட்செல் மார்ஷ் 4, நிகோலஸ் பூரன் 11, கேப்டன் ரிஷப் பண்ட் 3 ரன்னில் வெளியேற, எல்எஸ்ஜி 54 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், மார்க்ரம் – ஆயுஷ் பதோனி ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. மார்க்ரம் 31 பந்தில் அரை சதம் அடிக்க, பதோனி 33 பந்தில் அதை எட்டினார். மார்க்ரம் 66 ரன் (45 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பதோனி 50 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் அப்துல் சமத் சிக்சர்களாகப் பறக்கவிட… லக்னோ 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.டேவிட் மில்லர் 7 ரன், அப்துல் சமத் 30 ரன்னுடன் (10 பந்து, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஹசரங்கா 2, ஆர்ச்சர், சந்தீப்,  தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Vaibhav Suryavanshi

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 181 ரன் என்ற இலக்கை துரத்திய ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் – சூர்யவன்ஷி இணை 8.4 ஓவரில் 85 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி தனது பிரகாசமான வரவை உலகுக்கு அறிவித்த சூர்யவன்ஷி 34 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மார்க்ரம் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து வந்த நிதிஷ் ராணா 8 ரன்னில் வெளியேறினாலும், ஜெய்ஸ்வால் – கேப்டன் பராக் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஜெய்ஸ்வால் 74 ரன் (52 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), பராக் 39 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

கடைசி ஓவரில் ஆர்ஆர் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்ட நிலையில், துல்லியமாகப் பந்துவீசி அசத்திய ஆவேஷ் கான் 3வது பந்தில் ஹெட்மயரை வெளியேற்ற (12 ரன்)… பதற்றமான ராஜஸ்தான் தரப்பு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. ஜுரெல் 6 ரன், ஷுபம் துபே 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜெய்ஸ்வால், பராக், ஹெட்மயர் என 3 முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்து எல்எஸ்ஜி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆவேஷ் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார் (4-0-37-3). ஷர்துல் தாகூர், எய்டன் மார்க்ரம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top