ஐபிஎல் சீசன் 18ல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். எம்ஐ தொடக்க வீரர்களாக ரோகித், ரிக்கெல்டன் களமிறங்கினர். கலீல் அகமது வேகத்தில் ரோகித் டக் அவுட்டாகி வெளியேற மும்பை அதிர்ச்சியில் உறைந்தது.

ரிக்கெல்டன் 13 ரன் எடுத்து கலீல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வில் ஜாக்ஸ் 11 ரன் எடுத்து அஷ்வின் சூழலில் மூழ்க… மும்பை 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. கேப்டன் சூரியகுமார் 29 ரன், ராபின் மின்ஸ் 3, திலக் வர்மா 31, நமன் திர் 17 ரன் எடுத்து ஆப்கன் இளம் சுழல் நூர் அகமது (20 வயது) பந்துவீச்சில் அடுத்தடுத்து பலியாக, மும்பை 118/7 என சரிவை சந்தித்தது.
சாண்ட்னர் 11, போல்ட் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. தீபக் 28 ரன், சத்யநாராயணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை பந்துவீச்சில் நூர் அகமது 4 ஓவரில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கலீல் அகமது 3, எல்லிஸ், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிய இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.
ராகுல் திரிபாதி 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தாலும், ரச்சின் ரவிந்திரா – கேப்டன் ருத்துராஜ் கெயிக்வாட் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்து வெற்றி நம்பிக்கை அளித்தது. அதிரடியாக அரை சதம் விளாசிய ருத்துராஜ் 53 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவம் துபே 9, தீபக் ஹூடா 3 ரன் எடுத்து அறிமுக சுழல் விக்னேஷ் புதுர் (24 வயது, கேரளா) பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த சாம் கரன் 4 ரன்னில் பெவிலியன் திரும்ப, 116/5 என திடீர் சரிவை சந்தித்த சிஎஸ்கே பதற்றத்தின் பிடியில் சிக்கியது. எனினும், ரச்சின் – ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி 36 ரன் சேர்க்க, சென்னை வெற்றியை நெருங்கியது.
ஜடேஜா 17 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரச்சின் 65 ரன் (45 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), எம்.எஸ்.தோனி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் விக்னேஷ் 3, தீபக் சாஹர், வில் ஜாக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
நூர் அகமது ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. முதல் லீக் ஆட்டத்தில் தோற்பது என்ற சம்பிரதாயத்தை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக கடைப்பிடித்தது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.