அர்ஜூன் எரிகைசியிடம் வீழ்ந்தார் குகேஷ்

ஸ்டாவஞ்சர்

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியிடம் தோல்வி அடைந்தார்.

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தோல்வி அடைந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார் குகேஷ். அர்ஜூன் எரிகைசி கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் களமிறங்கினர்.

4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி 62-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 21 வயதான அர்ஜூன் எரிகைசி 2,801 ரேட்டிங் புள்ளிகளை பெற்று வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை குவித்தவர்களின் பட்டியலில் 15-வது இடத்தை பிடித்தார்.

அதேவேளையில் அதிக ரேட்டிங்களை புள்ளிகளை குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த் 2,800 புள்ளிகளை கடந்திருந்தார்.

2 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஹிகாரு நகமுரா தனது 2-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற அர்மகேடான் விளையாட்டில் ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு 1.5 புள்ளிகள் கிடைத்தது.

குகேஷ் புள்ளிகள் கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளார். கார்ல்சன் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பேபியானோ கருனா 3 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், சீனாவின் வெயி யி 1 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top