ரன்வேட்டைக்கு பஞ்சாப், கேகேஆர் ரெடி !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 15) இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் (கேகேஆர்) மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது பஞ்சாப் அணி. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 246 ரன்களை இலக்காக கொடுத்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் விளாசி தனிநபராக பஞ்சாப் அணியின் வெற்றியை சூறையாடினார்.

இன்றைய போட்டி நடைபெறும் முலான்பூர் ஆடுகளமும் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் நடப்பு சீசனில் இங்கு நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது. இதில் பஞ்சாப் அணி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய போட்டிக்கான ஆடுகளம் தட்டையாக இருக்கும் பட்சத்தில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடினாலும் அது பாதுகாப்பானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் இரு அணியிலுமே அதிரடி பட்டாளங்கள் அதிகம் உள்ளன.

கேகேஆர் அணியில் சுனில் நரேன், ரிங்கு சிங், வெங்கேடஷ் ஐயர், ரகுவன்ஷி ஆகியோர் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். இவர்களுடன் அஜிங்க்ய ரஹானே, குயிண்டன் டி காக், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் மட்டையை சுழற்றக்கூடியவர்கள். அதேவேளையில் பஞ்சாப் அணியில் பிரியன்ஷ் ஆர்யா, ஸ்ரேயஸ் ஐயர், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங் சிங், நேஹல் வதேரா ஆகியோர் அதிரடி பேட்ஸ்மேன்களாக உள்ளனர். மார்கஸ் ஸ்டாயின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பார்மில் இல்லாவிட்டாலும் அவர்களும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்கள்தான்.

இது ஒருபுறம் இருக்க நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவர் கூட 9 ரன்களுக்கு கீழ் வழங்கியது இல்லை. யுவேந்திர சாஹல் ஓவருக்கு சராசரியாக 11.13 ரன்களை வாரி வழங்கி உள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரா யாஷ் தாக்குர் இதே கதியில்தான் உள்ளார். அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளித்து வருகின்றனர். எனினும் இவர்களிடம் சீரான செயல் திறன் இல்லை.

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் தட்டையான ஆடுகளங்களிலும் சரி, மந்தமான ஆடுகளங்களிலும் சரி ஆபத்தான அணியாகவே திகழக்கூடும். நடப்பு சீசனில் அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியிருந்தது. பந்து வீச்சு துறையில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நேரன், வருண் சக்ரவர்த்தி, அனுபவம் வாய்ந்த மொயின் அலி ஆகியோருடன் வேகங்களான வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா பலம் சேர்த்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top