WTT ஸ்டார் கன்டென்டர் 2025 தகுதி சுற்றில் தமிழக வீரர் அபிநந்த் வெற்றி

சென்னை: WTT ஸ்டார் கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  இன்று (25-ம் தேதி) தகுதி சுற்று போட்டியுடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை  நடைபெறும் இந்தத் தொடரை ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் பிரதான ஸ்பான்சராக இந்தியன்ஆயில் நிறுவனம் உள்ளது.

 இந்நிலையில் இன்று (மார்ச் 25-ம் தேதி) காலை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு “WTT ஸ்டார் கன்டென்டர் 2025” டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தினார். உலகின் சிறந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 600 புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொடர் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும்.

பிற்பகலில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் முதல் நிலை வீரரான அபினந்துக்கு முதல் ஆட்டத்தில் ‘பை’ வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் தனது 2-வது ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த பங்கஜ் குமாருடன் மோதினார். 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபினந்த் 3-0 (11-3, 11-1, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த 2-ம் நிலை வீரரான பிரேயஷ் தனது முதல் ஆட்டத்தில் சகநாட்டு வீரரான முகமது அலியை  3-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஆனால் 2-வது ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் இத்தாலியின் கார்லோ ரோஸியிடம் தோல்வி அடைந்தார்.

 மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த 14-ம் நிலை வீராங்கனையான அம்ருதா புஷ்பக் 3-1 என்ற கணக்கில் அனன்யா முரளிதரனை தோற்கடித்தார். அம்ருதா தனது அடுத்த ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த சிண்ட்ரெலா தாஸுடன் மோதுகிறார்.

 மற்ற ஆட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேகன் செந்தில், கார்த்திகேயன் சோலையன் ஆகியோர் 5 செட்கள் வரை போராடி தோல்வி அடைந்தனர். மேகன் செந்தில், சகநாட்டைச் சேர்ந்த அர்னவ் கர்ணவீருடன் மோதினார். இதில் முடிவை தீர்மானித்த கடைசி செட்டை மேகன் செந்தில் கடுமையாக போராடி 16-18 என்ற கணக்கில் பறிகொடுத்தார். முடிவில் மேகன் செந்தில் 2-3 (3-11, 11-8, 11-13, 11-2, 16-18) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

கார்த்திகேயன் சோலையன் 2-3 (11-5, 11-13, 13-11, 8-11, 9-11) என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தீபேஷ் பக்வானிடம் வீழ்ந்தார். ஜெய லட்சுமண், ஸ்ரீராம் சிவம், தனுஜா நாகராஜன் ஆகியோரும் தகுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர். அபிநய் விஜய், வைல்டு கார்டு வீரரான ருத்ரா கோஷிடம் வீழ்ந்தார். மகளிர் பிரிவில் யாஷினி சிவசங்கர், ராதாபிரியா கோயலிடம் போராடி தோல்வி கண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top