Harshal Patel

சூப்பர் கிங்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

ஹர்ஷல் அபார பந்துவீச்சு

சென்னை: ஐபிஎல் 18வது சீசன் 43வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Harshal Patel

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற எஸ்ஆர்எச் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ஷமி வீசிய முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, சென்னைக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதிலிருந்து மீளும் முன்பாகவே சாம் கரன் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். மாத்ரே 30 ரன் (19 பந்து, 6 பவுண்டரி), ஜடேஜா 21 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். சிஎஸ்கே 9.3 ஓவரில் 74 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், டிவால்ட் பிரெவிஸ் சிக்சர்களைப் பறக்கவிட்டு ஆறுதல் அளித்தார்.

பிரெவிஸ் 42 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப… ஷிவம் துபே 12, கேப்டன் தோனி 6, அன்ஷுல் காம்போஜ் 2, நூர் அகமது 2 ரன்னில் அவுட்டாகி அணிவகுத்தனர். தீபக் ஹூடா 22 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து உனத்கட் வேகத்தில் அபிஷேக் ஷர்மா வசம் பிடிபட, சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

கலீல் அகமது 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 28 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கம்மின்ஸ், உனத்கட் தலா 2, ஷமி, கமிந்து மெண்டிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 20 ஓவரில் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். டிராவிஸ் ஹெட் 19, கிளாஸன் 7 ரன்னில் வெளியேற, சன்ரைசர்ஸ் 8 ஓவரில் 54 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

பொறுப்புடன் விளையாடிய இஷான் கிஷன் 44 ரன் எடுத்து (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) நூர் அகமது பந்துவீச்சில் சாம் கரன் வசம் பிடிபட்டார். அனிகேத் வர்மா 19 ரன்னில் (19 பந்து, 2 சிக்சர்) வெளியேற, சிஎஸ்கே தரப்பு உற்சாகம் அடைந்தது.

Ishan Kishan 2

எனினும், கமிந்து மெண்டிஸ் – நிதிஷ் குமார் ரெட்டி இணை உறுதியுடன் விளையாட… சன்ரைசர்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கமிந்து மெண்டிஸ் 32 ரன் (22 பந்து, 3 பவுண்டரி), நிதிஷ் குமார் 19 ரன்னுடன் (13 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி உதிரிகளாக மட்டுமே 15 ரன் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே பந்துவீச்சில் நூர் அகமது 2, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் வேகம் ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top