புதுடெல்லி
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கு இந்திய அணியின் புதிய ஷுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாமல் முதன்முறையாக இந்திய அணி வெளிநாட்டு தொடரில் விளையாட உள்ளது.
இதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை சோனி டெலிவிஷன் பெற்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் சோனி நிறுவனம், ஜியோ ஹாட்ஸ்டாருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகளையும் ஜியோஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.