குவாட்ரி அருணாவை வீழ்த்தினார் சினேஹித் சுரவஜ்ஜுலா

அகமதாபாத்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் நேற்று (ஜூன் 10) அகமதாபாத்தில் உள்ள EKA Arena அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் – கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்தது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் ரிக்கார்டோ வால்தர் (ஜெர்மனி), கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் இளம் இந்திய நட்சத்திரமான அங்கூர் பட்டாசார்ஜியுடன் மோதினார். இதில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் ரிக்கார்டோ வால்தர் 2-1 (11-10, 11-5, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான அய்ஹிகா முகர்ஜி, கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸுடன் (புயிர்ட்டோ ரிக்கோ) மோதினார். இதில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ் 2-1 (10-11, 11-8, 11-1) என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் ஜோடியான அய்ஹிகா முகர்ஜி, ரிக்கார்டோ வால்தர் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ், அங்கூர் பட்டாசார்ஜி ஜோடியுடன் மோதியது. இதில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ், அங்கூர் பட்டாசார்ஜி ஜோடி 2-1 (11-10, 8-11, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் இளம் இந்திய நட்சத்திரமான சினேஹித் சுரவஜ்ஜுலா, கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் அருணா குவாட்ரியுடன் (நைஜீரியா) பலப்பரீட்சை நடத்தினார். இதில் உலகத் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள அருணா குவாட்ரியை 3-0 (11-10, 11-9, 11-8) என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் 101-ம் நிலை வீரரான அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் சினேஹித் சுரவஜ்ஜுலா.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணிக்கு எதிரான டையில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. வெற்றியை தீர்மானித்த கடைசி மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் யாஷினி சிவசங்கர், கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியின் செலினா செல்வகுமாருடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் செலினா செல்வகுமார் முதல் செட்டை 11-10 என கைப்பற்றினார். 2-வது செட்டை யாஷினி சிவசங்கர் 11-4 என தன் வசப்படுத்தினார். இதன் மூலம் இந்த டையை அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணி (8-6) வெல்வது உறுதியானது. கடைசி செட்டை செலினா செல்வகுமார் 11-10 என கைப்பற்றினார். முடிவில் செலினா செல்வகுமார் 2-1 (11-10, 4-11, 11-10) என வெற்றி பெற்றார்.

எனினும் இந்த டையில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணி 5 டையில் 2 வெற்றி பெற்றது. 25 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 14 வெற்றிகளுடன் 36 புள்ளிகள் பெற்று தற்போதைக்கு மூன்றாம் இடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.

அதேவேளையில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணி 30 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் இன்று (ஜூன் 11) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் – பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் இந்த ஆட்டத்தை சந்திக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top