பிளே ஆஃப் சுற்று முனைப்பில் ஆர்சிபி !

பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 3) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

4 அரை சதங்களுடன் 443 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி மீண்டும் ஒரு முறை வெற்றிக்கான பங்களிப்பை வழங்குவதில் தீவிரம் காட்டக்கூடும். கடந்த 3 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் அடித்துள்ள தேவ்தத் படிக்கல், டெல்லி அணிக்கு எதிரான மந்தமான ஆடுகளத்தில் 73 ரன்கள் விளாசிய கிருணல் பாண்டியா ஆகியோரும் இருந்தும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்ஹட், கிருணல் பாண்டியா பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.

சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் 2 வெற்றி, 8 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி இன்றைய போட்டி உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு கவுரவமான முறையில் தொடரை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top