Romario

2 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி

சிஎஸ்கே ஏமாற்றம் * மாத்ரே – ஜடேஜா போராட்டம் வீண் * ரொமாரியோ அமர்க்களம்

பெங்களூரு: ஐபிஎல் 18வது சீசன் 52வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

Romario

எம்.சின்னசாமி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜேக்கப் பெத்தல், விராத் கோஹ்லி இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்னிங்சை தொடங்கினர்.

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 97 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஜேக்கப் 55 ரன் (33 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), கோஹ்லி 62 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, ஆர்சிபி பின்னடைவை சந்தித்தது.

அடுத்து வந்த படிக்கல் 17 ரன், ஜிதேஷ் ஷர்மா 7, கேப்டன் ரஜத் பத்திதார் 11 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க… ஆர்சிபி 17.4 ஓவரில் 157 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 19வது மற்றும் 20வது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்டு ருத்ரதாண்டவமாட, ஆர்சிபி ஸ்கோர் 200 ரன்னைக் கடந்து எகிறியது.

கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் 33 ரன்னும், பதிரணா வீசிய 20வது ஓவரில் 21 ரன்னும் கிடைக்க, பெங்களூரு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. டிம் டேவிட் 2 ரன், ரொமாரியோ 53 ரன்னுடன் (14 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிஎஸ்கே பந்துவீச்சில் பதிரணா 3, நூர் அகமது, சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே (17 வயது), ஷேக் ரஷீத் இணைந்து துரத்தலை தொடங்கினர். ரஷீத் 14 ரன், சாம் கரன் 5 ரன்னில் வெளியேற, சிஎஸ்கே 5.4 ஓவரில் 58 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், மாத்ரே – ஜடேஜா இணைந்து அதிரடியாக விளையாடி சென்னை ஸ்கோரை உயர்த்தினர். இவர்களைப் பிரிக்க ஆர்சிபி பவுலர்கள் மேற்கொண்ட வியூகங்கள், முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. மாத்ரே 25 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ஜடேஜா 29 பந்தில் 50 ரன் எடுத்தார். புவி வீசிய 4வது ஓவரில் மாத்ரே 4, 4, 4, 6, 4, 4 என தெறிக்கவிட்டார்.

Ayush Mhatre

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்து சென்னை அணிக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. சதம் விளாசி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக மாத்ரே 94 ரன்னில் (48 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த பந்திலேயே டிவால்ட் பிரெவிஸ் நடுவரின் தவறான முடிவால் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக டிஆர்எஸ் கேட்காமல் தாமதம் செய்ததால் பிரெவிஸ் வீணாக விக்கெட் தானம் செய்ய நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.  அடுத்து ஜடேஜா – தோனி இணைந்து பகீரதப் பிரயத்தனம் செய்ய, சிஎஸ்கே வெற்றியை நெருங்கியது.

கடைசி கட்டத்தில் ஆர்சிபி வீரர்களை பதற்றம் தொற்றிக் கொள்ள… 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதும் சென்னை அணிக்கு சாதகமாக இருந்தது. எனினும், சுயாஷ் ஷர்மா வீசிய 18வது ஓவரில் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, கடைசி 2 ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது.

புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் 14 ரன்கள் கிடைக்க, 6 பந்தில் 15 ரன் தேவை என்ற நிலையில்… யஷ் தயாள் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன் மட்டுமே கிடைத்தது. 3வது பந்தில் தோனி அவுட் (8 பந்தில் 12 ரன்). பதிரணாவுக்கு பதிலாக சூப்பர் சப்ஸ்டியூட் ஆக உள்ளே வந்த ஷிவம் துபே… எதிர்கொண்ட முதல் பந்தை சிக்சராகத் தூக்கியதுடன் அந்த பந்து இடுப்புக்கு மேலாக நோ பால் ஆக அமைய கூடுதலாக ஒரு ரன் மற்றும் ஃபிரீ ஹிட்டும் கிடைத்தது.

இதனால் சிஎஸ்கே வெற்றிக்கு 3 பந்தில் 6 ரன் வேண்டும் என களம் ரணகளமாக மாறியது. ஆனாலும், கூலாகப் பந்துவீசிய தயாள் அடுத்த 3 பந்திலும் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து வெறும் 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என சோர்ந்து போயிருந்த ஆர்சிபி தரப்பு இந்த த்ரில் வெற்றியால் ஆனந்தக் கூத்தாடியது.

ஜடேஜா 77 ரன் (45 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), துபே 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் லுங்கி என்ஜிடி 3, க்ருணால், யஷ் தயாள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியால், பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் முதலித்துக்கு முன்னேற, சிஎஸ்கே கடைசி இடத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. 14 பந்தில் 53 ரன் விளாசிய ரொமாரியோ ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top