இந்தியாவுடன் விளையாட நிபந்தனை போடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாட 3 நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. கொழும்பு நகரில் வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் வகையில் அட்டவணை உள்ளது. ஆனால், வங்கதேச அணியை உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நேற்று) பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் பிரதிநிதி முபஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அமைச்சருமான மொஹ்சின் நக்வியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது இந்தியாவுடனான போட்டியில் விளையாட 3 நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வருவாயில் அதிக பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளை மீண்டும் தொடங்க ஐசிசியின் உதவி மற்றும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் மரபுபடி கைக்குலுக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாகிஸ்தானின் கோரிக்கை தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top