நியூஸிலாந்து சாதனை வெற்றி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி தொடக்க வீரரை விரைவாக இழந்தது. ஆர்யன்ஷ் சர்மா 6 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்த நிலையில ஜேக்கப் டஃபி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அலிஷான் ஷராஃபு கேப்டன் முகமது வசீமுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார். பவர்பிளேவில் ஐக்கிய அரபு அமீரகம் 50 ரன்கள் சேர்த்தது.

இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் ஐக்கிய அரபு அமீரக அணி 12.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. அச்சுறுத்தல் கொடுத்த இந்த ஜோடியை 15வது ஓவரில் மிட்செல் சாண்ட்னர் பிரித்தார். தனது 14வது அரை சதத்தை கடந்த அலிஷான் ஷராஃபு 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்ஸரை நோக்கி விளாசினார்.

அப்போது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற மார்க் சாப்மேன் பந்தை துள்ளியவாறு பிடிக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறியதால் பந்தை உயரமாக மைதானத்துக்குள் வீசியபடி எல்லைக்கோட்டுக்கு வெளியே விழுந்தார். அந்த தருணத்தில் அருகில் நின்றி மிட்செல் சாண்ட்னர் கேட்ச் செய்த அலிஷான் ஷராஃபு வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு முகமது வசீமுடன் இணைந்து அலிஷான் ஷராஃபு 107 ரன்கள் சேர்த்தார்.

அப்போது ஸ்கோர் 14.2 ஓவர்களில் 119 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய ஹர்ஷி கவுசிக் 2 ரன்களில் கிளென் பிலிப்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மயங்க் குமார், முகமது வசீமுடன் இணைந்து மட்டையை சுழற்றினார். கிளென் பிலிப்ஸ் வீசிய 18வது ஓவரில் இந்த ஜோடி 27 ரன்களை விளாசியது. இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்ஸருக்கும் விளாசி அசத்தினார் மயங்க் குமார். அடுத்த பந்தில் உதிரி வாயிலாக 2 ரன்கள் எடுத்தது. இதற்கு மாற்றாக வீசிய பந்தில் முகமது வசீம் பவுண்டரி விரட்டினார். ஆனால் அதை நோபாலாக பிலிப்ஸ் வீசியிருந்தார்.

இதனால் கிடைத்த ஃப்ரீஹிட் வாய்ப்பில் முகமது வசீம் சிக்ஸர் பறக்கவிட்டார். அடுத்த 2 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்டது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூஸிலாந்து அணி ஒரு ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கியது இதுவே முதன்முறையாகும். அதிரடியாக விளையாடிய மயங்க் குமார் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் லாக்கி பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷோயிப் கான் 7, முகமது அர்ஃபான் 0 ரன்களில் நடையை கட்டினார்.

20 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி 6 விகெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பையில் அந்த அணி எடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. தனது 26வது அரை சதத்தை விளாசிய கேப்டன் முகமது வசீம் 45 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. இந்த எந்தவித தாக்கமும் இல்லாத ஐக்கிய அரபு அமீரக அணியின் பந்துவீச்சை நாலாபுறம் வெளுத்து வாங்கி ரன்கள் குவித்தது. பவர்பிளேவில் 78 ரன்கள் விளாசப்பட்டது.

டிம் ஷெய்பர்ட் 23 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 15வது அரை சதத்தையும், ஃபின் ஆலன் 27 பந்துகளில், 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் தனது 7வது அரை சதத்தையும் கடந்தனர். இந்த ஜோடியின் அதிரடியால் நியூஸிலாந்து அணி 8.3 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியால் மிரட்ட நியூஸிலாந்து அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டிம் ஷெய்பர்ட் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், ஃபி26 ன் ஆலன் 50 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் விளாசினர். ஆட்ட நாயகனாக டிம் ஷெய்பர்ட் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி 170 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

28 பந்துகளை மீதம் வைத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

2 வெற்றிகளின் மூலம் நியூஸிலாந்து அணி 4 புள்ளிகளுடன் ‘டி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

3 thoughts on “நியூஸிலாந்து சாதனை வெற்றி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top