சீனியர் நீச்சல் போட்டியில் புதிய மீட் சாதனை

சென்னையில் நடைபெற்றுவரும் 79-வது மாநில சீனியர் நீச்சல் போட்டியின் 2-வது நாளான நேற்று 3 புதிய மீட் சாதனைகள் படைக்கப்பட்டன.

டர்ட்டில்ஸ் அணி வீரர்கள் நிதிக் நாதெள்ளா, கவீன்ராஜ் மற்றும் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் ஆகியோர் புதிய மீட் சாதனைகள் நிகழ்த்தினர்.

சீனியர் ஆண்களுக்கான 200மீ. பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் சென்னையிலுள்ள டர்ட்டில்ஸ் அணி வீரர் நிதிக் நாதெள்ளா பந்தைய தூரத்தை 2 நிமிடம் 06.60 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தார்.

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு டி.டி.எஸ்.ஏ. திருநெல்வேலி வீரர் டி.சேது மாணிக்கவேல் 2 நிமிடம் 09.22 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.

ஆண்களுக்கான 200மீ. பட்டர்பிளை நீச்சலில் டர்ட்டில்ஸ் அணி வீரர் வி.கவீன்ராஜ், போட்டி தூரத்தை 2 நிமிடம் 11.11 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தார். முன்னதாக டர்ட்டில்ஸ் அணி வீரர் யுகேஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு 2 நிமிடம் 11.41 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நிதிக் நாதெள்ளாவும், கவீன்ராஜும் டர்ட்டில்ஸ் கிளப்பில் பயிற்சியாளர் டி.சந்திரசேகரிடம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பெண்களுக்கான 200மீ. பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் போட்டி தூரத்தை 02 நிமிடம் 27.28 வினாடிகளில் கடந்து தனது சாதனையை தானே முறியடித்து  புதிய மீட் சாதனை படைத்தார். முன்னதாக கடந்த ஆண்டு இவர் 02 நிமிடம் 28.81 வினாடிகளில் கடந்ததே சாதையாக இருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top