டி 20 கிரிக்கெட் வரலாற்றில் 3 சூப்பர் ஓவர்கள்

கிளாஸ்கோ

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நெதர்லாந்து – நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நெதர்லாந்து 7 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. தேஜா நிடமன்னாரு 35, விக்ரம்ஜித் சிங் 30, சகிப் ஜூல்ஃபிகர் 25 ரன்கள் சேர்த்தனர்.

153 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் சேர்க்க ஆட்டம் ’டை‘ ஆனது. கடைசி ஓவரில் நேபாளம் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் டெய்லண்டரான நந்தன் யாதவ் பவுண்டரி அடிக்க ஸ்கோர் சமநிலையை அடைந்தது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து 19 ரன்கள் விளாசியது. 20 ரன் இலக்குடன் விளையாடிய நேபாளம் அணி மேக்ஸ் ஓ‘டவுட் அதிரடியால் 19 ரன்கள் சேர்க்க ஆட்டம் டை ஆனது. தொடர்ந்து 2-வது முறையாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் நெதர்லாந்து 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணி 17 ரன்கள் சேர்க்க ஆட்டம் மீண்டும் சமநிலையை எட்டியது.

தொடர்ந்து 3-வது முறையாக சூப்பர் கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் அணி முதலில் பேட் செய்தது. ஸாச் லயன் கேச்ட் வீசிய ஓவரின் முதல் பந்தில் ரோஹித் பவுடல் ஆட்டமிழந்த நிலையில் அடுத்த இரு பந்துகளில் ரன்கள் ஏதும் சேர்க்கப்படாத நிலையில் 4-வது பந்தில் ரூபேஷ் சிங் வெளியேறினார். இதனால் நேபாளம் அணியின் இன்னிங்ஸ் ரன்கள் ஏதும் சேர்க்கப்படாமல் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து ஒரு ரன் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்துக்கு முதல் பந்திலேயே லெவிட் சிக்ஸர் விளாச அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது. டி 20 கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 3 சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top