டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முஸ்டாபிஸூர் ரஹ்மான்

புதுடெல்லி

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஜேக் பிரேசர் மெக்கருக்கு பதிலாக முஸ்டாபிஸூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் பிரேசர் மெக்கர்க் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வங்கதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஸூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

முஸ்டாபிஸூர் ரஹ்மானை ரூ.6 கோடிக்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் வங்கதேச வீரர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். ஜேக் பிரேசர் மெக்கர்க்கை டெல்லி அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசனில் அவர், 6 ஆட்டங்களில் விளையாடி 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஐபிஎல் தொடர்களில் 57 ஆட்டங்களில் விளையாடி 61 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேவேளையில் வங்கதேச அணிக்காக 106 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்களை சாய்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியிருந்தார்.

ஐபிஎல் நடப்பு சீசனில் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top