போல்ட், ரோகித், ஸ்கை அசத்தல் * பரிதாப நிலையில் சன்ரைசர்ஸ்
ஹைதராபாத்: ஐபிஎல் 18வது சீசன் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து எஸ்ஆரஎச் இன்னிங்சை தொடங்கினர்.
ஹெட் டக் அவுட்டாகி நடையை கட்ட… இஷான் கிஷன் 1, அபிஷேக் 8, நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். ஹைதராபாத் அணி 4.1 ஓவரில் 13 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து நிலைகுலைந்தது. அனிகேத் வர்மா 12 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் ரிக்கெல்டன் வசம் பிடிபட, ஹைதராபாத் 35/5 என மேலும் பின்னடைவை சந்தித்தது.
சன்ரைசர்ஸ் 100 ரன் தாண்டுவதே கேள்விக்குறியான நிலையில், ஹெய்ன்ரிச் கிளாஸன் – அபினவ் மனோகர் இணைந்து அதிரடியாக விளையாடி மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தனர். கிளாஸன் 34 பந்தில் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 63 பந்தில் 99 ரன் சேர்த்து அசத்தியது. கிளாஸன் 71 ரன் (44 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசு பும்ரா வேகத்தில் திலக் வர்மா வசம் பிடிபட்டார். மனோகர் 43 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் ஹிட் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்.

கேப்டன் கம்மின்ஸ் 1 ரன்னில் அவுட்டாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 4 ஓவரில் 26 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். தீபக் சாஹர் 2, பும்ரா, ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ரியான் ரிக்கெல்டன், ரோகித் ஷர்மா இணைந்து துரத்தலை தொடங்கினர். ரிக்கெல்டன் 11 ரன், வில் ஜாக்ஸ் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஹைதராபாத் தரப்பு சற்று உற்சாகம் அடைந்தாலும், ரோகித் ஷர்மா – சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
ரோகித் 35 பந்தில் அரை சதம் அடித்தார். ரோகித் – ஸ்கை இணைந்து 3வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர். ரோகித் 70 ரன் (46 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி இஷான் மலிங்கா பந்துவீச்சில் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து எளிதாக வென்றது. சூரியகுமார் 40 ரன் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட், மலிங்கா, ஜீஷன் அன்சாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 9 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ், ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ அணிகளை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறியது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 போட்டியில் 6வது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 9வது இடத்தில் நீடிக்கிறது.