Hardik

லக்னோ சூப்பர் ஜெயண்ட்சிடம் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

கேப்டன் ஹர்திக் போராட்டம் வீண்

லக்னோ: ஐபிஎல் 18வது சீசன் 16வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் 12 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

வாஜ்பாய் ஏகனா அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக ரோகித் ஷர்மா விலகிய நிலையில், ஆல்ரவுண்டர் ராஜ் பாவாவுக்கு  வாய்ப்பளிக்கப்பட்டது.

Hardik Pandya

மிட்செல் மார்ஷ், மார்க்ரம் இணைந்து சூப்பர் ஜெயண்ட்ஸ் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 76 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. மார்ஷ் 60 ரன் (31 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்னேஷ் புதூர் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 12, கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். மார்க்ரம் – ஆயுஷ் பதோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. பதோனி 30 ரன் (19 பந்து, 4 பவுண்டரி), மார்க்ரம் 53 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 4, டேவிட் மில்லர் 27 ரன், ஆகாஷ் தீப் (0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. ஷர்துல் தாகூர் 5, ஆவேஷ் கான் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் கேப்டனாக முத்திரை பதித்தார். முன்னதாக அனில் கும்ப்ளே (ஆர்சிபி கேப்டன்) 2009ல் டெக்கான் சார்ஜர்சுக்கு எதிராக 16 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.  

டிரெண்ட் போல்ட், அஷ்வனி குமார், விக்னேஷ் புதூர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே வில் ஜாக்ஸ் (5 ரன்), ரியான் ரிக்கெல்டன் (10 ரன்) விக்கெட்டை இழந்து திணறியது.

எனினும், நமன் திர் – சூரியகுமார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. நமன் திர் 46 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி திக்வேஷ் ரதி பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து சூரியகுமார் – திலக் வர்மா இணைந்து 66 ரன் சேர்க்க, மும்பை தரப்பு வெற்றிக் கனவில் மிதந்தது.

சூரியகுமார் 67 ரன் (43 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆவேஷ் கான் பந்துவீச்சில் அப்துல் சமத் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினாலும், திலக் வர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறியது, மும்பை இந்தியன்சுக்கு பின்னடைவை கொடுத்தது.

Digvesh Singh 1

இதனால் திலக் வர்மாவுக்கு (23 பந்துல் 25 ரன்) கட்டாய ஓய்வளித்து (ரிடயர்டு அவுட்), சாண்ட்னரை உள்ளே அனுப்பினார்கள். ஆவேஷ் வீசிய கடைசி ஓவரில் 22 ரன் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவால் 9 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் மட்டுமே சேர்த்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹர்திக் 28 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), சாண்ட்னர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் ஷர்துல், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். லக்னோ 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

4 ஓவரில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய திக்வேஷ் சிங் ரதி ஆட்ட நாயகன் விருது பெற்றார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடக்கும் 17வது லீக் ஆட்டத்தில் (ஏப்.5), சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top