கே.எல்.ராகுல் சதம் விளாசல்

நார்த்தம்டன்

இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நேற்று (ஜூன் 6) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய கருண் நாயருடன் இணைந்து கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய கருண் நாயர் 71 பந்துதுகளில், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.

சீராக ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல் 151 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 168 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்த நிலையில் ஜார்ஜ் கில் பந்தில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரெல் 52, நித்திஷ் குமார் ரெட்டி 34, ஷர்துல் தாக்குர் 19 ரன்களில் வெளியேறினர்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா ஏ அணி 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்தது. தனுஷ் கோட்டியன் 5, அன்ஷுல் கம்போஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து லயன்ஸ் அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ 3, ஜார்ஜ் கில் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top