சர்பராஸ் கான் 92, துருவ் ஜூரெல் 82 ரன்கள் விளாசில்
கன்டர்பரி
இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கன்டர்பரியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி தொடக்க பேட்ஸ்மேன்களை விரைவாக இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். 3–வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கருண் நாயரும், சர்பராஸ் கானும் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 119 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசிய நிலையில் சர்பராஸ் கான் ஜோஷ் ஹல் பந்தில் ஆட்டமிழந்தார்.
3–வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய துருவ் ஜூரெலும் மட்டையை சுழற்றினார். மறுமுனையில் அற்புதமாக விளையாடிய கருண் நாயர் 155 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் சதம் அடிதத்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா ஏ அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.
கருண் நாயர் 246 பந்துகளில், ஒரு சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 186 ரன்களும், துருவ் ஜூரெல் 104 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் விளாசி களத்தில் இருந்தனர்.
