இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

கேன்டர்பரி

இந்தியா ’ஏ‘ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இன் முதல் போட்டி இன்று (மே 30-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டி தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி, கருண் நாயர், ஷர்துல் தாக்குர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரெல், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே இவர்கள் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கருண் நாயரை தவிர மற்ற அனைவரும் முதன்முறையாக இங்கிலாந்து சூழ்நிலைகளில் விளையாட உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்களது இடம் காலியாக உள்ளது. இதில் தொடக்க வீரருக்கான இடத்தை பிடிக்க அபிமன்யூ ஈஸ்வரன் முயற்சிக்கக்கூடும்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், 101 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த சில டெஸ்ட் தொடர்களில் அவர், இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும் விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அபிமன்யு ஈஸ்வரன் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியில் தொடக்க வீரர் அல்லது 3-வது வீரருக்கான இடத்தை பெற வாய்ப்பு உள்ளது.

கருண் நாயர், கவுண்டி கிரிக்கெட்டில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாடி உள்ளார். இதனால் அந்த அனுபவத்தை அவர், பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.

இவர்களுடன் சர்பராஷ் கான், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், தனுஷ் கோட்டியன் ஆகியோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி தேர்வுக்குழுவினரின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.

அணி விவரம்

இந்தியா ஏ: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், இஷான் கிஷன், மானவ் சுதர், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், தனுஷ் கோட்டியன், ஹர்ஷ் துபே, முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே.

இங்கிலாந்து லயன்ஸ்: ஜேம்ஸ் ரெவ் (கேப்டன்), ஃபர்ஹான் அகமது, ரெஹான் அகமது, சோனி பேக்கர், ஜோர்டான் காக்ஸ், ராக்கி பிளின்டாஃப், எமிலியோ கே, டாம் ஹெய்ன்ஸ், ஜார்ஜ் ஹில், ஜோஷ் ஹல், எடி ஜாக், பென் மெக்கின்னி, டான் மவுஸ்லி, அஜீத் சிங் டேல், கிறிஸ் வோக்ஸ், மேக்ஸ் ஹோல்டன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top