Priyansh Arya

மீண்டும் சொதப்பியது சிஎஸ்கே

ஆர்யா அதிரடியில் பஞ்சாப் அசத்தல்

முல்லன்பூர்: பஞ்சாப்ப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 220 ரன் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Priyansh Arya

மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. முன்னணி வீரர்கள் பிரப்சிம்ரன் 0, கேப்டன் ஷ்ரேயாஸ் 9, ஸ்டாய்னிஸ் 4, நெஹல் வதேரா 9, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 103 ரன் (42 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி சிஎஸ்கே பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார்.

கடைசி கட்டத்தில் அதிரடியை தொடர்ந்த ஷஷாங்க் சிங் 52 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மார்கோ யான்சென் 34 ரன்னுடன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் அஷ்வின், கலீல் அகமது தலா 2, முகேஷ், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே வழக்கம்போலவே முதல் 10 ஓவர்களில் தட்டுத்தடுமாறி, பின்னர் அடித்துப் பிடித்து 200 ரன்னை கடந்தாலும் 18 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது தோல்வியைத் தழுவியது. ரச்சின் 36 (23 பந்து, 6 பவுண்டரி), கான்வே 69 (49 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ருதுராஜ் 1, ஷிவம் துபே 42 (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), எம்.எஸ்.தோனி 27 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விடைபெற்றனர்.

Shashank Singh

சிஎஸ்கே அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜடேஜா 9 ரன், விஜய் ஷங்கர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  பஞ்சாப் பந்துவீச்சில் பெர்குசன் 2, யஷ் தாகூர், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதிரடி சதம் விளாசிய ஆர்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

4 போட்டியில் 3வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 4வது இடத்துக்கு முன்னேற, 5 போட்டியில் 4வது தோல்வியை ’வான்ட்டட்’ ஆகப் பெற்ற! சிஎஸ்கே 9வது இடத்தில் உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top