புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
ஸ்டாவஞ்சர்
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் மோதிய குகேஷ் 92-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
2-வது சுற்றில் குகேஷ், எரிகைசியிடம் தோல்வி கண்டிருந்தார். இந்த தோல்விக்கு தற்போது அவர், பதிலடி கொடுக்கும் விதமாக 7-வது சுற்று ஆட்டம் அமைந்தது.
உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தனது 7-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரும் 2-ம் நிலை வீரருமான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். 21-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இருவரும் சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட அர்மகேதான் டை பிரேக்கரில் கார்ல்சன் வெற்றி பெற்று 1.5 புள்ளிகளை பெற்றார்.
இன்னும் 3 சுற்றுகளே உள்ள நிலையில் குகேஷ் 11.5 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் பேபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேக்னஸ் கார்ல்சன் 11 புள்ளிகளுடன் 3-வது இடம் வக்கிறார். ஹிகாரு நகமுரா 8.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அர்ஜூன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி 6.5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.