ஜூலை 5-ல் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி

பெங்களூரு

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி வரும் ஜூலை 5-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியை இந்தத் தொடரை கடந்த மே 24-ம் தேதி ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற நட்சத்திரமான நீரஜ் சோப்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த போட்யை இந்திய தடகள கூட்டமைப்பும் அங்கீகரித்திருந்தது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டி வரும் ஜூலை 5-ம் தேதி பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்கள் 7 பேருடன் நீரஜ் சோப்ரா உட்பட 5 இந்தியர்களும் பங்கேற்கின்றனர்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் யாதவ், கிஷோர் ஜெனா, ரோஹித் யாதவ் சாஹில் சில்வால் ஆகியார் மற்ற 4 இந்திய வீரர்களாவர்.

இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (சிறப்பான செயல் திறன் 93.07 மீட்டர்), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர் (93.90 மீட்டர்), 2015-ம் ஆண்டு உலக சாம்பியனான கென்யாவின் ஜூலியஸ் யெகோ (92.72 மீட்டர்), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் (87.76 மீட்டர்), ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜப்பானின் ஜென்கி டீன் (84.28 மீட்டர்), இலங்கையின் ருமேஷ் பதிரகே (85.45 மீட்டர்), பிரேசிலின் லூயிஸ் மவுரிசியோ டா சில்வா (86.34 மீட்டர்) ஆகியோர் வெளிநாட்டுப் போட்டியாளர்களாக உள்ளனர். இந்த போட்டிக்கு உலக தடகள அமைப்பு ‘ஏ’ பிரிவு அந்தஸ்து வழங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top