சிராஜ், கிஷோர், சுதர்சன், பட்லர் அமர்க்களம்
பெங்களூரு: ஐபிஎல் 18வது சீசன் 14வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. விராத் கோஹ்லி 7, தேவ்தத் படிக்கல் 4, ஃபில் சால்ட் 14, கேப்டன் ரஜத் பத்திதார் 12 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி 42 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

லிவிங்ஸ்டன் – ஜிதேஷ் ஷர்மா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. ஜிதேஷ் ஷர்மா 33 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), க்ருணால் பாண்டியா 5 ரன் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் – டிம் டேவிட் இணை 7வது விக்கெட்டுக்கு 24 பந்தில் 46 ரன் சேர்த்தது. லிவிங்ஸ்டன் 54 ரன் (40 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்), டேவிட் 32 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அவுட்டாக, ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. புவனேஷ்வர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் பந்துவீச்சில் சிராஜ் 3, சாய் கிஷோர் 2, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.
சாய் சுதர்சன், ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். கில் 14 ரன்னில் வெளியேற, சுதர்சன் – ஜோஸ் பட்லர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்து அணியை வெற்றிப் பாதையில் செலுத்தியது. சிறப்பாக விளையாடிய சுதர்சன் 49 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் வசம் பிடிபட்டார்.

அடுத்து பட்லர் – ரூதர்போர்டு ஜோடி அதிரடியில் இறங்க, ஆர்சிபி பவுலர்கள் செய்வதறியாது விழி பிதுங்கினர். பட்லர் 31 பந்தில் அரை சதம் அடித்தார். இரு முனையிலும் சிக்சர் மழை பொழிய, குஜராத் 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
பட்லர் 73 ரன் (39 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ரூதர்போர்டு 30 ரன்னுடன் (18 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை ஆர்சிபி கோட்டைவிட, குஜராத் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. முகமது சிராஜ் (4-0-19-3) ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஈடன் கார்டனில் நடக்கும் 15வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.