இந்திய கிரிக்கெட் டி.வி. வர்ணனையாளர்களின் சொத்தா?… கவுதம் கம்பீர் பாய்ச்சல்

புதுடெல்லி

டெல்லியில் தனியார் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது:

நான் 8 மாதங்களாக பயிற்சியாளர் பணியில் இருக்கிறேன். ஆட்டத்தின் முடிவுகள் சாதகமாக வரவில்லை என்றால், விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. விமர்சனம் செய்வது மக்களின் வேலை. ஆனால் 25 ஆண்டுகளாக வர்ணனையாளர் பாக்ஸில் அமர்ந்து கொண்டு இந்திய கிரிக்கெட்டை தங்கள் சொந்த சொத்து என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல, அது 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. இந்த நபர்கள் எனது பயிற்சி, மூளையதிர்ச்சி (2011-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தலையில் அடிப்பட்டதால் தொடரில் இருந்து வெளியேறியது குறித்து), சாம்பியன்ஸ் டிராபி பரிசுத் தொகையை விநியோகம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பரிசுத் தொகையை நான் உதவி பயிற்சியாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்தேனா இல்லையா என்பது குறித்து யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியது இல்லை. இவர்கள் கண்ணாடி வீடுகளில் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் மீது கற்களை எறியக்கூடாது.

எனக்கும், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மோதல் என்று கூறுகிறார்கள். இவர்கள் யார், யார் இதையெல்லாம் சொல்வதற்கு? இவை விளையாட்டு நிபுணர்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் நடத்துபவர்களால் செய்யப்பட்ட ஊகங்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம்.

நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்காவிட்டால் நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக ரோஹித் சர்மா செய்ததை நான் மதிக்கிறேன். ரோஹித் சர்மாவுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளேன். அவர் மீது நல்ல அபிமானம் உள்ளது. அது தொடக்கத்திலிருந்தே இருக்கிறது. அவருக்கும் அது அப்படியே இருக்கும்.

இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.

கவுதம் கம்பீர் வர்ணயையாளர்கள் என கூறியது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோரையே குறிப்பதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் தனிப்பட்ட வீரர்களை குறிவைத்து விமர்சனங்கள் செய்வதாக ஏற்கெனவே ஒருதரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு கவுதம் கம்பீர் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக பலம் கூறி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top